(Reading time: 14 - 28 minutes)

சிறுகதை - மரம் ! மழை ! மனிதன் - ராகா

Rain

ன் சிறுவயதில் மேடை ஏறியதெல்லாம் எனக்கு இப்போது நினைவிற்கு வருகிறது. நேற்று யதேச்சையாக என் பள்ளிக்கு அருகில் வசிக்கும் ஒரு நண்பனின் வீட்டுக்கு சென்றேன். பள்ளி ஞாபகங்கள் என்னை தொற்றிக் கொண்டது.

“வா மச்சி ஸ்கூலுக்கு உள்ள போயிட்டு வரலாம்” என்றான். சரி என்று அந்த கேட்டைத் திறந்தேன்.

“யாரது?” என்று ஒரு 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெரியவர் தடுத்தார்.

“யாருப்பா நீங்க? இந்த நேரத்துல எதுக்கு வந்து இருக்கீங்க. ஏதாவது அட்ரஸ் வேணுமா?”

“ஐயா நாங்க இந்த ஸ்கூல்ல தான் பத்தாவது படிச்சோம். 2004 TO 2005 பேஜ். இந்த பக்கம் ஒரு வேலையா வந்தோம். நாம படிச்ச ஸ்கூல் ஆச்சேன்னு உள்ள வந்து பாக்கணும்னு தோணுச்சு, நாங்க உள்ளார போகலாமா?” ​

“தாராளமா போயி பாருங்க தம்பி என்று அனுமதித்தார்.”

 ஏனோ பள்ளிக்கூடத்தில் அடி எடுத்து வைத்தவுடன் மயிர் கூசுகிறது. மனம் கனக்கிறது. கண்ணுக்கு போட்ட ஐ டிராப்ஸ் ஓரத்தில் வழிந்து கன்னத்தை நனைப்பது போல், கண் லேசாக கலங்குகிறது. இப்போது பாயிண்டர் ஷூ அணிந்துள்ள இதே கால்களால் தான், பலமுறை செருப்பில்லாமல் இந்த ஸ்கூலை சுற்றியிருக்கிறேன். கால் நகங்களுக்கிடையில் சிக்கிய மண்ணை வேப்பங்குச்சியால் எடுத்திருக்கிறேன்.

உள்ளே சென்றவுடன் வீசிய வேப்பம்பூவின் வாசம் என் மூக்கைத் திருகி மரத்தடிக்கு அழைத்துச் சென்றது. மரத்தடியில் உட்கார்ந்தோம். தலையை அந்த மரத்தில் சாய்த்தேன் கண்களை மூடினேன்.

கூட படித்த மனோஜ், முருகன், சுந்தரலிங்கம், பிரதீபன், சரண்யா, ஷாலினி, மாரிமுத்து, வினோத், A. பிராகாஷ், S. பிரகாஷ், ராஜ், மனோகர், நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்கிறேன் என முகமெல்லாம் அப்பிக் கொள்ளும் மணிகண்டன். எத்தனை எத்தனை நினைவுகள். டக் கின் செய்து ஷு போட்டு நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, வராத புன்னகையை க்ளையண்டுக்காக வீம்பாய் வரவழைத்து பேசுவதில் இல்லாத ஒரு சுகம் பள்ளிப் பருவத்தில் கோரஸாக சொல்லும் குட் மானிங் டீச்சரில் உண்டு. மாற்றுக் கருத்தில்லை.

பள்ளிப் பருவத்தில் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சர், பெரம்பு கம்பால் அடித்த சோஷியல் வாத்தியார், லைஃபில் இன்று வரை அப்ளை செய்ய காத்திருக்கும் சைன் தீட்டா, காஸ் தீட்டாவை சொல்லிக் கொடுத்த மேத்ஸ் சார், முடி வெட்டாமல் வந்தால் முட்டிப் போட சொல்லும் பி.இ.டி சார், சுத்த தமிழில் பேசும் தமிழ் அய்யா. ஒரு ரூபாய் சில்லறை கொடுத்து பக்கத்து கடை ராம் அண்ணனிடம் எலந்த ஜூசை வாங்கும் போது இருந்த சந்தோஷம், க்ரெடிட் கார்டை ஸ்வைப் செய்து வாங்கும் “ஸ்பைஸி வெஜ் பிஸா வித் மோர் சீஸ்”ஸில் கிடைப்பதில்லை. பல ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுத்தாலும் என் தமிழாசிரியரை மறந்தும் “இறந்து” விட முடியாது.

அவர் !

உஜாலா வெள்ளை நிற வேட்டி, வெள்ளை சட்டை. இடது கையில் ஒரு ஹெச்.எம்.டி கோல்ட் வாட்ச். வலதில் ஒரு நகைக் கடை பேக். இரண்டு நாள் தாடியுடன் பாண்ட்ஸ் பவுடரால் வெள்ளையாக பூத்த முகம். முண்டாசு கவிஞனைப் போல் முறுக்கு மீசை. முப்பது விநாடிகளுக்குள் அவரை தமிழாசிரியர் என்று கண்டு பிடித்துவிடலாம்.

பள்ளியில் டீச்சர்களுக்கென்று தனியாக பாத்ரூம் உண்டு. 11.15 க்கு ஒரு இடைவேளை. அந்த சமயத்தில் அவர் அந்த பாத்ரூமிற்கு சென்று ஏதோ கோபுரம் படம் போட்ட அட்டை பெட்டியில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பிடிப்பார். (அதன் பெயர் சார்மினார் என்பதை, நான் வயதுக்கு வந்தவுடன் அறிந்து கொண்டேன்). பாத்ரூமிலிருந்து புகை புகையாய் வரும், நான், செந்தில், பாலமுருகன் மூவரும் ஒடிச் சென்று அவர் தாழிட்ட பாத்ரூம் கதவை தட்டி விட்டு ஓடி வந்துவிடுவோம். அவர்,

 “டேய் ஏன்டா இப்படி பண்றீங்க? போங்கடா அங்கிட்டு, வந்தேன் பிச்சி புடுவன்!”

“ஒகே ஐயா” என்று கூறிவிட்டு மீண்டும் ஒருமுறை கதவை தட்டி விட்டு வேப்ப மரத்தின் பின் ஒளிந்துக் கொள்வோம். அவர் கதவைத் துறந்து சுற்றும் முற்றும் பார்ப்பார். யாரும் பாக்கல என்று நினைத்துக் கொண்டு, வேட்டியின் ஒரு முனையை கக்கத்தில் வைத்துக் கொண்டு தன் அறை நோக்கிச் செல்வார்.

அவர் ஒரு ஜீனியஸ்!

நான் ஓரளவு எழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதுவதற்கு ஏணியாய் இருந்தவர். பத்து திருக்குறளை பட்டென்று மூச்சு விடாமல் ஒப்பித்தால் ஒரு ஹீரோ பேனா பரிசளிப்பார். அவர் வகுப்பெடுக்கும் போது தூக்கமே வராது. சீதையை இராவணன் தூக்கிக் கொண்டு போகும் போது கோபப்படுவார். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கியது எப்படி என்று டஸ்டரை வைத்து செய்து காண்பிப்பார். மதுரையை கண்ணகி எரித்த போது இருந்த கோபத்தை அப்படியே நடித்துக் காண்பிப்பார். பாரதியின் “சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா” பாடலைக் கிளி கொஞ்சும் குரலோடு பாடுவார். பகவத் கீதை, குரான், பைபிள் போன்ற அனைத்து நூல்களிலிருந்தும் உதாரணம் சொல்லுவார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.