(Reading time: 17 - 33 minutes)

ருமுறை அவனுக்கு மொட்டை கடுதாசி போல, தெரியாத எண்ணில் காதல் மெசேஜ் ஒன்று வரவும், அதை பொறுத்து கொள்ள முடியாமல், யாரது என்று கண்டுபிடித்து காளி அவதாரம் எடுத்தாள் ஸ்ரீநிதி. அவளைப் பொறுத்தமட்டிலும் இன்னொரு மங்கையின் பார்வை சின்ன ரசனையுடன் கூட அவனை மொய்த்துவிட கூடாது. அதே போலதான் அவனும் யாரையும் அதிகம் ரசிக்க கூடாது! இந்த தடா கதாநாயகிகளுக்கும் தான்!

“சமந்தா சிரிப்பு செம்மயா இருக்குல டீ?” என்று ரசிக்கும் குரலில் அவன் சொல்லிவிட்டால் ஸ்ரீநிதி எனும் பட்டாசு குறைந்தபட்சம் இரண்டு நாளாவது அடங்காமல் வெடிக்கும். நிஷானுக்குமே அவளின் இந்த மென் உணர்வுகளை ரசித்திட பிடிக்கும்.

“என்னை கண்காணித்து அன்பு புகட்டிட ஒரே ஒரு பெண்ணாய் இவள் போதும்!” என்றுதான் தோன்றியது அவனுக்கு. மேலும், அழகினை பார்த்ததும் கவிழ்ந்துவிடுபவன் அவன் இல்லை என்பதினால்,இதுவரை இந்த விஷயம் இருவருக்குள்ளும் பெரிதாய் நின்றதில்லை!

ஆனால், இன்று? இந்த உணர்விற்கு பெயரென்ன ? காதலா?என்ற கேள்வி அவன் மனதில் விஸ்வரூபம் எடுத்தது. இதுவரை ஸ்ரீநிஷானிடம் தான் அவனை காதலிப்பதாக மட்டும் அவள் சொன்னதே இல்லை.

“ என்னை லவ் பண்ணுறியா அம்மு?” என்று ஸ்ரீநிஷான் கேட்டால்,

“ லவ்ன்னா கொஞ்சம் அன்புதான் ஸ்ரீ… எனக்கு உன் மேல அதையும் தாண்டிய அன்பு இருக்குமா.. அந்த அன்புக்கு காதல் என்கிற வார்த்தை போதாது” என்று பதிலளித்து அவனையும் குழப்பிடுவாள்.

அவன் விளையாட்டுக்கு, “ நான் கல்யாணமே பண்ணிக்க போறதில்லை” என்று சொன்னால் அவள் முகத்தில் ஒளி கூடும்.

“ நான் இதை கேட்டு சந்தோஷப்பட கூடாதுதான் ஸ்ரீ.. ஆனா சந்தோஷம் பொங்கி வருதுமா.. நீ கல்யாணம் பண்ணிக்கலன்னா, அதை நினைச்சு சந்தோஷ படுற ஒரே ஜீவன் நான்தான்மா” என்று மொழிவாள்.

எதிர்காலத்தைப் பற்றி பேசும்போதெல்லாம், அவளுக்கென ஒருவன், நிஷானுக்கென ஒருத்தி என்று அவள் கற்பனையில் கூட சொல்வதில்லை.

“உனக்கு 80 வயசாகும்போது, எனக்கு 75 ஆகிடும்ல ஸ்ரீ..அப்போ நான் உன் கையை பிடிச்சுகிட்டு, நாம சேர்த்து வெச்ச நினைவுகளை எல்லாம் சொல்லுவேன்.. நீ பொக்கை வாயி தாத்தாவா என்னை பார்த்து சிரிப்ப.. அதை ரசிச்சுகிட்டே என் உயிர் போயிடனும்மா” என்று உணர்ந்து சொல்லுவாள் ஸ்ரீநிதி. அவனுக்கு கோபம் வரும்தான். ஆனால், அவள் ரசித்து சொல்லும் விதத்தில் மௌனமாய் இருந்துவிடுவான். இப்படி தன் மீது கண்மூடித்தனமான அன்பினைப் பொழிபவளிடம் எப்படி இதை சொல்வது? குழப்பத்துடன் கடற்கரைக்கு கிளம்பினான் ஸ்ரீநிஷான்.

டற்கரை..!

“என் ஸ்ரீக்கு என்ன கவலை? கடவுளே, அவனும் நானும் வேற வேற இல்லை. அவனுக்கு என்ன பிரச்சனை கொடுப்பதாக இருந்தாலும் அதை எனக்கு கொடு” என்று மானசீகமாய் வேண்டிக்கொண்டு கரையோரம் அமர்ந்திருந்தாள் ஸ்ரீநிதி.

சில நிமிடங்களில் காத்திருப்பிறகு பின், தன் அருகில் ஸ்டைலாய் அமர்ந்தவனைப் பார்த்து பெரிதாய் புன்னகைத்தாள் ஸ்ரீநிதி.

“வாடா நிவாஸ்…” என்று வரவேற்றாள் அவள்.

“பிசாசு.. நான் வாயே திறக்கல.. அதுக்குள்ள நான் அண்ணன் இல்லன்னு எப்படிடீ கண்டு பிடிச்ச?” என்று கேட்டான் ஸ்ரீநிவாஸ். ஸ்ரீநிவாஸ், ஸ்ரீநிஷானை விட சில நொடிகள் தாமதித்து பிறந்தவன். அவனுக்கும் நிஷானுக்கும் குணத்தை தவிர எந்தவொரு வேற்றுமையும் இல்லை, தங்களது பெற்றோருக்கு அடுத்ததாக ஸ்ரீநிதி மட்டுமே இந்த வேறுபட்டை மிக சரியாய் சொல்கிறாள் என்பதை எண்ணி பலமுறை வியந்திருக்கிறான் ஸ்ரீநிவாஸ்.

“ ஹா ஹா.. என் ஸ்ரீ நடந்துவரும்போது கடற்கரை மணலெல்லாம் பூவாக பூக்கும்.. ஆனா, நீ சரியான அடாவடி.. நீ நடக்குற நடையில் மணல் மறுபடியும் கடலுக்குள்ளயே போயிடும் போ..”

“ஹும்கும் நீ எனக்கும் தானே ப்ரண்டு? ஆனா ஏன் அவனை மட்டும் தூக்கி வெச்சு பேசி ஓரவஞ்சனையாக நடந்துக்குற?”

“ கோபமா கேட்குறியா? இல்ல இயல்பா கேட்குறியா?”

“உன்கிட்ட கோபப்பட முடியுமா சொல்லு?”

“ஹும்கும்.. சரி இந்த பேச்சு இருக்கட்டும் .. நீ வந்த விஷயத்தை சொல்லு.. ஏதோ ஒரு விஷயத்தை நேரடியாக சொல்லமுடியாமல் ஸ்ரீ உன்னை அனுப்பிருக்கான்.. ரைட்டா?”

“கொஞ்சம் தப்பு.. அண்ணன் அனுப்பி வைக்கல.. நான்தான் வந்தேன்..”

“சரி சொல்லு என்ன விஷயம்?”

“ வீட்டுல அண்ணாவுக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ண போறாங்க..”

“ஒ..”

“பொண்ணு எங்க சொந்தம் தான்”

“ஓ..!”

“இதுக்குத்தான் அவன் உன்னை பார்க்கல..”

“என்ன?”

“உன் மூஞ்சிய பாரு! அப்படியே ஃபியூஸ் போச்சு..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.