(Reading time: 5 - 9 minutes)

எனக்கு பிடித்தவை - 13 - வேரில்லாத மரங்கள்

verillathaMarangal

ஒவ்வொருவரின் ரசனை ஒவ்வொரு விதம்... ஒரு கதையை படிக்கும் போது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான எண்ணங்கள் தோன்றும்... இவை எல்லாம் ஒரே போல இருப்பது இல்லை... இந்த தொடரில் நான் சொல்ல போவது எல்லாம் என்னுடைய ரசனைகள், என்னுடைய எண்ணங்கள்... உங்களின் கருத்துக்கள் இதில் இருந்து மாறுபட்டு இருக்கலாம்... அதையும் தெரிந்துக் கொள்ள விழைகிறேன்... உங்களுடைய கருத்துக்களை தயங்காமல் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

ந்த முறை நான் பகிர்ந்துக்கொள்ள போகும் கதை, சிவசங்கரி எழுதிய ' வேரில்லாத மரங்கள்' எனும் கதை.

நான் சிறுமியாக கதைகள் படிக்கத் தொடங்கிய நேரத்தில் படித்த கதை இது.

இப்போது சில மாதங்களுக்கு முன் மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கதை:

ஹிந்து மதத்தை சார்ந்த மாதவனும், கிறிஸ்த்தவ மதத்தை சார்ந்த வசந்தமேரியும் காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.

அவர்களின் காதலுக்கு இருவர் குடும்பத்திலும் எதிர்ப்பு வந்த போதும், ஒருவர் மதத்தை மற்றவர் மீது திணிப்பதில்லை என்ற உறுதியோடு இருவரும் தங்களின் திருமண வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.

திருமணத்திற்கு பின் சின்ன சின்ன சலசலப்புகள், பிரச்சனைகள் வந்தாலும் இருவர் இடையே இருக்கும் அன்பு குறையாமல் இருக்கிறது. எனவே பிரச்சனைகளை இயல்பாக தாண்டி வரவும் செய்கிறார்கள்.

வசந்தா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது மாதவனின் அம்மாவிற்கு ஹார்ட் அட்டாக் வர, அவன் காஞ்சிபுரம் செல்ல வேண்டி இருக்கிறது.

அந்த நேரத்தில் மனைவிக்கு துணையாக இருக்க அவளை தாயாக இருந்து வளர்த்த அத்தையம்மா, பரிமளாவை வசந்தாவின் விருப்பத்திற்கு ஏற்ப அழைத்து வந்து, துணையாக விட்டு விட்டு செல்கிறான் மாதவன்.

அதுவரை இரண்டு மத சின்னங்களும் இல்லாமல் இருந்த அந்த வீட்டில் பரிமளாவின் மூலம் கிறிஸ்துவ மத சின்னங்கள் ஆங்காங்கே தோன்ற தொடங்குகின்றது!

அதை பற்றி மாதவன் கேட்கும் போது அதையெல்லாம் பெரிது படுத்த வேண்டாம் என்கிறாள் வசந்தா. எனவே வேண்டுமென்றே ஹிந்து கடவுளின் படங்களையும் வீட்டில் மாட்டுகிறான் மாதவன்.

அவர்கள் இருவரிடையே பனிப்போர் தோன்ற தொடங்கும் நேரத்தில் எதிர்பாராமல் மாதவனின் அம்மா இறந்துவிடுகிறார்கள்.

அம்மாவிற்கு பின் தனியாக இருக்கும் அப்பாவிற்கு துணையாக காஞ்சிபுரத்திற்கே போய் விடுவோம் என்று மாதவன் சொல்ல, அதை ஏற்க மறுத்து அவனின் அப்பாவை அவர்களுடனே தங்க அழைத்து வர சொல்கிறாள் வசந்தா.

அதன் படி அப்பா தணிகாசலத்தை வீட்டிற்கு அழைத்து வருகிறான் மாதவன்.

அதன் பின் பரிமளா – தணிகாசலம் இடையே வரும் நீயா நானா போட்டி, வசந்தா – மாதவனையும் எட்டி, அவர்களின் குழந்தை ராஜாவை பல விதங்களில் தாக்குகிறது!

குழந்தைக்கு பெயர் வைப்ப,து பள்ளியில் சேர்ப்பது என அனைத்திலும் விவாதங்களுக்கு மேல் விவாதங்கள் எழ, எல்லாவற்றிலுமே ராஜாவிற்கு அவர்களின் நிலைக்கு கீழான வசதி, வாய்ப்புகளே இறுதியில் கிடைக்கின்றன...

வளர, வளர பெரியவர்களின் தாக்கத்தினால் அவனின் குணமும் மாறி போகின்றது...

தாத்தா – பாட்டி நடுவே நடக்கும் வார்த்தை போரை புரிந்துக் கொண்டு, அவர்களிடம் நாசுக்காக பேசி காசு வாங்கிக் கொண்டு விருப்பம் போல நடப்பவன், அம்மா- அப்பா இடையே நடக்கும் விவாதங்களால் தன்னுடைய நடவடிக்கைகள் அவர்களுக்கு எட்டாமல் இருப்பதையும் புரிந்துக் கொள்கிறான்.

வசந்தா-மாதவனின் வீட்டின் அடுத்த வீட்டிற்கு குடி வரும் மஹாதேவன், இங்கே நடக்கும் விஷயங்களை பார்த்து மனம் வெதும்புகிறார்.

ராஜாவின் துடுக்குத்தனமான பேச்சையும், நடவடிக்கைகளையும் பார்த்து முதலில் அவனை தவறாக நினைத்தாலும், அவனிடம் பேசி பழகிய பின் அவனை பற்றி புரிந்துக் கொள்கிறார்.

அவனின் பிரச்சனை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான் என்பது அவருக்கு புரிகிறது.

பெரியவர்களிடம் பேசி பார்க்கலாமா என அவர் யோசிக்கும் போதே, திடீரென ராஜாவிற்கு மஞ்சள்காமாலை வருகிறது.

எப்போதும் போல பரிமளாவும், தணிகாசலமும் தங்களின் நம்பிக்கை அடிப்படையில் அடித்துக் கொள்ள, ராஜாவின் உடல் நிலை இவர்களிடையே சிக்கி மோசமாகிறது!

சில நாட்களுக்கு பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ராஜா, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போகிறான்.

மனம் முழுக்க வருத்தத்துடன் அவனை பார்க்க வரும் மஹாதேவன், அதற்கு மேலும் மனதை மறைக்க இயலாமல், அவனின் இறுதி சடங்கை எந்த மதத்தின் படி நடத்துவது என்று முடிவு செய்து விட்டீர்களா என கேட்கிறார்..

சடங்குகள் எல்லாம் மதம் இல்லை...

அதை இனிமேலாவது புரிந்துக் கொண்டு பெரியவர்கள் இளையத் தலைமுறைக்கு வழிக்காட்டுங்கள் என கண்ணீருடன் சொல்லி விட்டு நடக்கிறார். 


தையை படித்து முடிக்கும் போது மனம் பாரமாகி போயிருந்தது!

கதை என்ற நிலையை தாண்டி,

பாவம் ராஜா!

எத்தனை இனிமையாக போயிருக்க வேண்டிய வசந்தா – மாதவன் வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே!

என்பது போன்ற எண்ணங்கள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஆசிரியர் சொல்லி இருப்பது போல, பெரியவர்கள் பெரியவர்களாய் வழிக் காட்ட வேண்டியது எத்தனை அவசியம் என்பதை புரிந்துக் கொள்ள முடிந்தது!

எத்தனையோ கதைகளை படிக்கிறோம், அவற்றுள் நிஜத்தை துல்லியமாய் சொல்லும் இந்த கதை தனித்துவம் பெற்றது என்று சொல்ல வேண்டும்!

வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் படியுங்கள். படித்தவர்கள் உங்களின் கருத்துக்களையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நன்றி!

நந்தினி

இந்த தொடரின் மற்ற பதிவுகளை படிக்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.

{kunena_discuss:1141}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.